

மே 21ம் நாள் காலை 8-30 மணியளவில் சாக் பல்கலைக் கழகத்தின் காபிஸ்ட்ராநோ இசை அரங்கம் இசையில் நாட்டம் மிகுந்தவர்களால் நிரம்பி வழிந்தது. காரணம் சாக்ரமெண்டோ ஆராதனா நடத்திய சங்கீத மும்மூர்த்திகள் விழா.
சில ஆண்டுகளுக்கு முன் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டிலிருந்து மும்மூர்த்திகள் விழாவாக விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் இது இவர்களின் இரண்டாம் ஆண்டு இசை விழா ஆகும்.
விழா குழலிசை விதூஷி சிக்கில் மைதிலி சந்திரசேகரின் சேதுலாரா என்ற பாடலுடன் துவங்கியது. பின்னர் கர்நாடக இசை வித்வான் சிக்கில் குருசரண் வழியொட்டி தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் சேர்ந்திசையாக இசைக்கலைஞர்களால் தக்க பக்க வாத்யங்களுடன் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சாக்ரமெண்டோ மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள பல இசைப்பள்ளிகளிலிருந்து வந்த மாணவ மாணவியர்கள் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் நேர்த்தியாகப் பாடி தங்கள் இசைத்திறனை காட்டி, தங்கள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பெருமை சேர்த்தனர். மேலும் இசைக்கருவிகளில் பயிற்சி பெற்றவர்கள் தம் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.
தவிர, மேடையில், இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற, வளரும் கலைஞர்களின் தனி வீணை, வயலின் கச்சேரிகள் இடம் பெற்றன.
இன்னும் சில மாணவ, மாணவியர் சீர்காழி மூவர் என்றழைக்கப்பட்ட தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பாடி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.
விழாவில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக சௌராஷ்டிர மும்மூர்த்திகளின் ஓர் அறிமுகம் என்ற ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை முனைவர் அர்ச்சனா வெங்கடேசன் பார்வையாளர்கள் கவனத்திற்கு வைத்தார்.
கூடவே வித்வான் சிக்கில் குருசரண் சௌராஷ்டிர மும்மூர்த்திகளான வெங்கட ரமண பாகவதர், கவி வெங்கடசூரி, நாயகி சுவாமிகள் ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி விளக்கமளித்தார். பாடல்களின் சிறப்பு அவை பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி இயற்றப்பட்டவையாகும்.
முத்தாய்ப்பாக, விதூஷி சங்கீதா சுவாமிநாதனின் இசைக்கச்சேரி சிறப்பாக நடந்தேறியது. வயலினிலில் வித்வான் சரவணபிரியன், மிருதங்கத்தில் ஸ்ரீ கோபால் ரவீந்த்ரன் பக்க துணையாக இருந்தனர்.
சம்பந்தபட்டவர்களுக்கு விழாக்குழுவினர் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
ரஜனிகோபாலன்
சாக்ரமெண்டோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.